Thursday, July 13, 2017

கைமீறிபோய்விட்ட காஷ்மீர்
பூலோக சொர்க்கம் காஷ்மீர் இன்று நரகமாக ஆக்கப்பட்டு விட்டது. உலகிலேயே விதவைகள் அதிகம் உள்ள பகுதி என்ற பெயர் பெற்ற காஷ்மீர், எண்ணற்ற அனாதை குழந்தைகள் வாழும் பிரதேசம் என்று அறியப்பட்ட காஷ்மீர், இன்று ஊனமுற்ற இளைஞர்கள் நிறைந்த மாநிலம் என்று பேசப்படும் அவலத்திற்கு ஆளாகி வருகிறது.
இதற்கு யார் காரணம்?
ஒரு கோடியே 26 லட்சம் மக்கள் தொகை கொண்ட காஷ்மீரில் ராணுவம், துணை ராணுவம், தேசிய துப்பாக்கி படை, மத்திய போலீஸ் படை, மாநில போலீஸ் என பல லட்சம் காவல் படையினர் உள்ளனர்.
2010ம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட புள்ளி விபரப்படியே 3 லட்சம் இந்திய ராணுவத்தினரும், 70 ஆயிரம் தேசிய ஆயுதப்படையினரும், 1லட்சத்து முப்பதாயிரம் மத்திய போலீஸ் படையினரும் என ஐந்து லட்சம் காவல்படையினர் இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 6 லட்சத்து 60 ஆயிரம் ஆகிவிட்டது. இதுதவிர மாநில போலீஸாரும் உள்ளனர்.
காஷ்மீரில் ஆயுதப் படையினரை அல்லது ஆயுதம் தாங்கிய இந்துத்துவ வாதிகளை ஏராளமாக குடியமர்த்த வேண்டும் என்பது இஸ்ரேலின் மொஸாத் சொல்லிக் கொடுத்த திட்டம். 1993ல் இஸ்ரேலின் அன்றைய வெளியுறவு அமைச்சர் சிமோன் பெரோஸ் இந்தியாவுக்கு வருகை தந்தபோது ‘காஷ்மீரை இந்தியா வெற்றி கொள்வது’ பற்றி பாடம் நடத்தினார். பாலஸ்தீனத்தை இஸ்ரேல் அபகரித்ததை விவரித்த அவர் மேற்கு கரையில் யூத குடியிருப்புக்களையும் யூத ராணுவத்தையும் குடியமர்த்தியது போல் இந்தியாவில் செய்யுங்கள் என்றார்.
அந்த வழிகாட்டுதல்தான் செயல்படுத்தப்பட்டது. பல லட்சம் ஆயுதப்படையினரை குவித்து அவர்களுக்கு எல்லை மீறிய சுதந்திரத்தை வழங்கியதன் விளைவு, பிறக்கும் குழந்தை முதல் இறக்கும் முதியோர் வரை அத்தனை பேரும் வெறுக்கும் வகையில் ஆயுதப்படையினரின் செயல்பாடுகள் அமைகின்றன.
காஷ்மீரில் ஒரு முஸ்லிம் இளைஞனை பார்த்தால் அவனை பாகிஸ்தான் தீவிரவாதியாக பாவிப்பது, துப்பாக்கி வைத்திருப்பவர்கள் பொழுது போக்கிற்காக வேட்டைக்குச் சென்று பறவைகளைச் சுடுவதைப்போல் போலி என்கவுண்டர்களை செய்வது, அழகிற்கு பெயர் பெற்ற காஷ்மீர் பள்ளத்தாக்கு பெண்களை கற்பழிப்பது, பள்ளிவாசலில் பாங்கு சொல்ல பயன் படுத்தப்படும் ஒலி பெருக்கி களைக் கூட பயன்படுத்தி அழைப்பு விடுத்து ஆட்களை வரவழைத்து விரும்புபவர்களை அள்ளிச்சென்று பின்னர் அவர்களை விடுவிக்க லட்சக்கணக்கில் பேரம் பேசுவது, இதுபோன்ற செயல்கள் தொடர் கதையாகிவிட்ட காரணத்தாலேயே இந்தியாவை நேசிக்கும் காஷ்மீர் களும், இந்தியாவுடன் தான் காஷ்மீர் இணைந்திருக்க வேண்டும் என
சொல்பவர்களும் இந்திய ஆயுதப்படையினர் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றே வலியுறுத்துவதாக காஷ்மீரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் கிதிஷிறிகி உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என மனித உரிமை ஆர்வளர்கள், உண்மை அறியும் குழுவினர், நடுநிலை பத்திரிக்கையாளர்கள் காஷ்மீரை கூர்ந்து கவனிக்கும் அரசியல் நோக்கர்கள், அறிவுஜீவிகள் கூறி வருகின்றனர்.
இன்றைய நிலவரப்படி காஷ்மீரிகளுக்கு இரண்டு பக்கத்திலும் இடி. ஒன்று சுதந்திரத்திற்காக போராடுகிறோம் என்ற பெயரில் பிரிவினை போராளிகளின் பயங்கரவாதம். இன்னொன்று இந்தியாவுடன்தான் காஷ்மீர் எனக் கூறி சீருடையணிந்த ஆயுதப்படையினர் நடத்தும் பயங்கரவாதம். இரண்டிலும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி பொதுமக்கள்தான்.
காஷ்மீர் நிலவரத்தை கையாள்வதில் மத்திய & மாநில அரசுகள் தோல்வியடைந்து விட்டன என்பதே நிதர்சனமான உண்மை. இஸ்ரேல் போன்ற பாஸிஸ சக்திகளிடம் ஆலோசனை கேட்காமல் ஐனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்களிடம் ஆலோசனை பெறப்பட்டிருந்தால் காஷ்மீரிகளின் மனங்களை இந்தியா வென்றிருக்க முடியும். ஆனால் இன்று எல்லாமே கைமீறிப் போய்விட்டதாக காட்சி தருகிறது.
170 ஆண்டு துயரம்
முகலாய சக்கரவர்த்தி அக்பர் கி.பி. 1586ல் காஷ்மீரை கைப்பற்றி சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார். பின்னர் முதலாம் ராமச்சந்திராவை அதன் ஆளுனராக நியமித்தார். அந்த ராமச்சந்திராதான் இந்து தேவதையான ஜம்வர் மாதாவின் பெயரில் ஜம்மு நகரை நிறுவினார். காதலர்களின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்படும் ஸ்ரீநகரின் ஷாலிமார் பூந்தோட்டம் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் உருவாக்கப்பட்டதே. காஷ்மீரின் கோடைகால தலைநகராக ஸ்ரீநகரும், குளிர்கால தலைநகராக ஜம்முவும் செயல்படுகின்றன. 1752களில் ஆப்கானிஸ்தானின் அகமதுஷா அப்தாலியின் ஆதிக்கத்தின் கீழ் வந்த காஷ்மீரை 1782 வரை ரஞ்சித்சிங் ஆண்டார். 1819ல் ஜம்முவை பஞ்சாபின் கீழ் கொண்டு வந்தார். பின்னர் மீண்டும் தோக்ரா மன்னரான குலாப் சிங்கிடமே கொடுத்துவிட்டார்.
காஷ்மீரின் ஆட்சி சீக்கியர்களிடம் வந்ததுமே முஸ்லிம்களுக்கான சோதனை தொடங்கிவிட்டது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி காஷ்மீரை குலாப் சிங்கிடமிருந்து அமிர்தரஸ் ஒப்பந்தத்தின்படி 75 லட்ச ரூபாய்க்கு 1846ல் வாங்கியதும், காஷ்மீரிகளின் உடமைகளும் வாழ்வாதாரமும் பறிபோயின. அன்று முதல் இன்றுவரை சுமார் 170 வருடங்களாக காஷ்மீர் முஸ்லிம்கள் இன்னல்களையே அனுபவித்து வருகின்றனர்.
மன்னர் ஹரிசிங்கின் ஆட்சியின் போது காஷ்மீர் முஸ்லிம்களுக்கெதிரான கொடுமைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. 1930களில் ஆங்கிலேயே ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய சுதந்திரப் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியிருந்து. அதே காலகட்டத்தில் தான் ஹரிசிங்கின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராட்டம் நடத்தினர். இதற்காக அரசுப்பணியில் இருந்து விலகி முஸ்லிம் மாநாடு இயக்கத்தை தொடங்கினார் ஷேக் அப்துல்லா.
நேருவின் நண்பரான ஷேக் அப்துல்லா நேருவின் ஆலோசனை படியே தமது இயக்கத்தின் பெயரை தேசிய மாநாடு என மாற்றினார். 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா & பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாக விடுதலை பெற்றன. அச்சமயத்தில் சமஸ்தானங்கள் இணைக்கும் முயற்சி நடைபெற்று வந்தது. காஷ்மீரும் ஹைதராபாத்தும் பிரச்சனைக்குரியவைகளாக இருந்தன. காஷ்மீரில் பெரும்பாலான மக்கள் முஸ்லிம்கள். ஆனால் மன்னர் இந்து.
ஹைதராபாதில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள். ஆனால், மன்னர் முஸ்லிம். ஹைதராபாத் ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் உயிரிழந்தனர். மன்னர் ஹரிசிங்கோ காஷ்மீர் தனியாக இயங்கும் என அறிவித்துவிட்டார்.
1947 அக்டோபர் 22ல் பாகிஸ்தான் ராணுவத்தின் ழிகீதிறி என்ற படை பிரிவு பஷ்தூன் ஆப்கானி பழங்குடியினருடன் இணைந்து காஷ்மீரின் மீது படை எடுத்தது. அதிர்ச்சியடைந்த ஹரி சிங் இந்தியாவை உதவிக்கு அழைத்தார்.
காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதாக மன்னர் ஒப்புக் கொண்டால்தான் தலையிடுவோம் என நேருவும், மவுண்ட் பேட்டனும் கூறிவிட்டனர். வேறு வழியின்றி இந்திய பிரதிநிதி வி.பி.மேனன் நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டார் ஹரி சிங்.
இந்திய ராணுவம் 1947 அக்டோபர் 27ல் காஷ்மீருக்குள் நுழைந்து பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்தது. அதற்குள் காஷ்மீரின் 30 சதவீத பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்து விட்டது. ஐ.நா. கதவை இந்தியா தட்டியது. ஐ.நா. தலையிட்டது. காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறிய பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா. வழி கூறியது.
மன்னர் ஹரி சிங்குடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் பாதுகாப்பு அயலுறவு தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகள் இந்திய அரசிடம் இருக்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370வது பிரிவின் படி சுயாட்சி உரிமைகள் கொண்ட மாநிலமாக காஷ்மீர் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2.11.1947ல் வானொலி மூலம் உரையாற்றிய நேரு பொது வாக்கெடுப்பு நடத்தி இறுதி முடிவை காஷ்மீரிகளே தீர்மானிப்பார்கள் என்றார்.
05.03.1948ல் ஷேக் அப்துல்லா காஷ்மீர் பிரதமர் ஆனார். ஹரி சிங்கின் மகன் கரண் சிங் ஜனாதிபதியானார். ஐந்து ஆண்டுகள் ஆயின காஷ்மீருக்கு தன்னாட்சி என்ற நேரு உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும் என ஷேக் அப்துல்லா வலியுறுத்தினார்.
இதனால் 1953 அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் நேருவுடன் செய்த உடன்படிக்கையை அடுத்து 1975 பிப்ரவரி 25ல் காஷ்மீர் முதல்வரானார்.
1982ல் அவர் மறைவுக்குப்பின் அவரது புதல்வர் பரூக் அப்துல்லா அதனை தொடர்ந்து பரூகின் புதல்வர் உமர் அப்துல்லா என கஷ்மீர் முதல்வர் பதவி வசித்தனர். 2014இல் நடைபெற்ற காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. மக்கள் ஜனநாயக கட்சி, பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தது. ம.ஜ.க. தலைவர் முப்தி முஹம்மது சயீத் முதல்வரானார். அவர் மறைவுக்குப்பின் அவரது புதல்வி மஹ்பூபா முப்தி முதல்வராக உள்ளார்.
காஷ்மீரில் யார் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் விடுதலையையே எதிர்ப்பார்க்கின்றனர்; காஷ்மீர் மக்களை பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளையுமே ஆக்கிரமிப்பாளர்களாகவே கருதுகின்றனர் என்பது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டான் நியூஸ் நாளேடுகள், சிழிழி மிஙிழி தொலைக்காட்சிகள் உள்ளிட்ட எத்தனையோ ஊடக ஆய்வுகள் நிரூபித்தன.
1990 முதல் 2015 முடிய 25 ஆண்டுகளில் காஷ்மீரில் கொல்லப்பட்டவர்கள் லட்சத்திற்கு மேல் தற்போது பா.ஜ.க.வுடன் இணைந்த கூட்டணி ஆட்சி காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தும் என்ற பிரச்சாரம் பொய்த்துப் போய், காஷ்மீரில் எல்லாமே கைமீறி போய் விட்டது என்பதை சமீபகால நிகழ்வுகள் காட்டுகின்றன.
காஷ்மீரில் படித்தவர்களுக்கு கூட வேலை இல்லா நிலைமை, இந்தியாவின் பிற பகுதிகளில் சுதந்திரமாக செல்ல, தங்க, வேலை செய்ய இயலா நிலைமை இவை காஷ்மீரிகளை போராளிகளாக்குகிறது.
இன்று காஷ்மீர் போராளிகளுடன் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட படித்தவர்களும் பட்டதாரிகளும் கரம் கோர்த்து களத்தில் இறங்கிருப்பதற்கு காரணம் வேலை வாய்ப்பு இன்மையும், வெளியிடங்களில் வேலை பார்க்கமுடியாத சூழ்நிலையும், ஆயுதப்படையின் வரம்பு மீறிய அட்டூழியங்களும் தான்.
2010ம் ஆண்டு ஆயுதபடை துப்பாக்கிச் சூட்டில் காலித் என்ற வாலிபர் கொல்லப்படுகிறார். இதைக்கண்டு துடிதுடித்த 15 வயது அவனது தம்பி பள்ளிப்படிப்பை நிறுத்தி ஹிஸ்புல் முஜாத்தின் அமைப்பில் சேருகிறான். இணைய தளம் மூலம் பலவரையும் அந்த இயக்கத்தில் சேர்க்கிறான் தலைமை தளபதியாக உயர்கிறான். அவனது தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்படுகிறது.
அந்த 21 வயது புர்ஹான் முஸாபர் வானிதான் கடந்த 8.7.2016 வெள்ளிக்கிழமை ஆயுதப்படையினரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவரது ஜனாஸா புல்வாமா மாவட்டம் டிரால் நகரில் 9ம் தேதி நடைபெற்றபோது 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை எதிர்த்து
முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டது. வன்முறை வெடித்தது. காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை அடியோடு ஸ்தம்பித்தது. 10 மாவட்டங்களில் இரண்டு வாரங்களாக ஊரடங்கு உத்தரவு உள்ளது. செல்பேசி இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. நாளிதழ்கள் வெளிவரவில்லை.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 என்றும்
காயமடைந்தோர் 2000க்கும் மேல் என்றும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலரின் நிலைமை கவலைக் கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
காஷ்மீரில் கலவரத்தில் ஈடுபடும் இளைஞர்களும், சிறுவர்களும் ஆயுதப்படையினரை எதிர்த்து கற்கலையே வீச, அவர்களை அடக்க ஆயுதப்படையினர் துப்பாக்கி சூடு கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்கச் செய்கின்றனர். இதற்கு அவர்கள் பயன்படுத்துவது பெல்லட்கன் என்ற உலோக குண்டுகளாகும். இதனால் காஷ்மீரில் எண்ணற்ற இளைஞர்களின் கண்பார்வை பாறிக்கப்பட்டுள்ளது. ஏ£ளமானோர் பார்வை திரும்ப வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நிபுணர்களை அனுப்ப மத்திய அரசிடம் முதல்வர் மற்பூபா முப்தி கோரிக்கை வைத்துள்ளார். காஷ்மீரில் நடப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸில் நாடுகளிடம் பாகிஸ்தான் புகார் செய்துள்ளது. ஐ.நா. பொதுச்செயலரும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் நிலவரம் தொடர்பாக உயர்நிலை குழு கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கூட்டினார். அமைதிகாக்க வேண்டுகோள் விடுத்தார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், காங்கிரஸ் தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட தலைவர்களிடம் பேசினார்.
இந்தியாவை நேசிக்கும் காஷ்மீரிகளும் இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தே இருக்கும் என்பவர்களும் போராளிகளுடன் ஒரே விஷயத்தில் ஒன்று படுகின்றனர். அது ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் உள்ளிட்ட கொடூர சட்டங்கள் திரும்பப்பெறப்பட வேண்டும் என்பதுதான்.
1958 செப்டம்பர் 11ல் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட இச்சட்டம், அருணாசல பிரதேசம், அஸாம், மணிப்பூர், மேகாலயா, மிஸோராம், நாகலாந்து, திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்காக கொண்டுவரப்பட்டு பின்னர் 1990ல் ஜம்மு காஷ்மீருக்காக விரிவாக்கப்பட்டது.
முதன்முதலாக மணிப்பூரில் அமல்படுத்தப்பட்ட இச்சட்டத்தை எதிர்த்து ஐரோம் சர்மிலா 10 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருக்கிறார். மருத்துவமனையில் கட்டாயப்படுத்தி அவருக்கு திரவ உணவை செலுத்தி வருகிறார்கள்.
‘ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டத்தின்படி பதற்றம் நிறைந்த பகுதிகளாக இருந்தாலும் ராணுவத்தினரோ, துணை ராணுவத்தினரோ தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறக்கூடாது. அதுமட்டுமின்றி ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யும் நேரம் வந்து விட்டது’ என 8.7.2016 அன்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
“காஷ்மீரில் நடப்பது சட்ட ஒழுங்கு பிரச்சனையும் அல்ல; இது ராணுவத்தால் கையாளப்படக்கூடியதும் அல்ல; இது முழுக்க முழுக்க அரசியல் பிரச்சனை; காஷ்மீரில் ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு காரணம் மத்திய அரசின் குளறுபடிகளும், மோசடிகளுமே! கொள்கை மாற்றம் ஏற்படாதவரை இப்போது எரிவது போல் காஷ்மீர் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும்” என்கிறார் அம்மாநில முன்னாள் முதல்வராக இருந்த உமர் அப்துல்லாவிடம் அரசியல் ஆலோசகராக பணியாற்றிய தன்வீர் சாதிக்.
“2004இல் மன்மோகன் தலைமையில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்றது. கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட இடதுசாரிகள் வெளியிலிருந்து அந்த அரசை ஆதரித்தனர். அந்த ஆட்சியின் ராஜதந்திரத்தால் காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் சூழ்நிலை உருவானது. காஷ்மீர் போராளி குழுக்களும் கிட்டத்தட்ட இந்த ‘காஷ்மீர் திட்டத்தை’ ஏற்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர்.
பாகிஸ்தானும் அதை ஆதரித்தது. அவர்களுடன் தனிப்பட்ட முறையில் மன்மோகன் சிங்கும் பேசிவந்தார். இந்த சூழ்நிலையில்தான் ஆயுதப்படையினரின் நடவடிக்கையால் இந்த முயற்சிக்கு சீர்குலைவு ஏற்பட்டது.
2010ல் 120 காஷ்மீரிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான மனநிலை காஷ்மீரிகளிடம் மீண்டும் ஏற்பட்டது. அரசியல் நிர்பந்தங்களுக்காக 2013ல் அப்சல் குரு அவசர அவசரமாக தூக்கிலிடப்பட்ட சம்பவம் புதிய கிளர்ச்சிகளுக்கு விதை தூவிவிட்டது. இப்போது நடைபெறும் சம்பவங்கள் 1990க்கு பிறகு நடைபெற்ற சம்பவங்களிளேயே மிக உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் பயங்கரவாதிகளுடன் படித்தவர்களும் மதப்பற்று மிக்கவர்களும் இளைஞர்களும் கரம் கோர்த்து விட்டனர்” என்கிறார் டெல்லி ஜவகர்லால் நேரு சர்வதேச ஆய்வுகள் துறை பேராசிரியர் ஹேப்பிமோன் ஜேக்கப்.
இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் 370வது பிரிவை ரத்து செய்வது பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கக்கூடியவர்கள் இந்த யதார்த்தங்களை புரிந்துகொள்ள வேண்டும்.
அவர்களுக்கு மட்டுமல்ல & இது மத்திய பா.ஜ.க. அரசின் காதுகளிலும் விழ வேண்டும். அப்போதுதான் காஷ்மீர் இந்தியாவுடன் நீடித்து நிலைக்க வழி ஏற்படும்.